தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும். இதற்கான அதிகாரப்பூர்வ தேர்தல் அறிவிக்கை வருகிற 6-ந்தேதி வெளியிடப்படும். அன்றே மனுதாக்கல் தொடங்க உள்ளது.
ஓட்டுப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் 2-ந்தேதி நடைபெறும். இது தொடர்பான அட்டவணை மற்றும் விவரங்கள் இன்று வெளியிடப்படுகிறது.
ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 1,18,974 பதவியிடங்களை நிரப்பிட நேரடித்தேர்தல் நடைபெறும். இதில் 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 12,524 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களும் மற்றும் 99,324 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும்.
கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும்.
முதல் கட்டத்தில் 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6,251 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49,638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 27.12.2019 அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.
இரண்டாம் கட்டத்தில் 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6,273 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 49,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 30.12.2019 அன்று வாக்குப்பதிவு நடை பெறும்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஆகிய 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், 4 விதமான வாக்குச் சீட்டுக்கள் பயன்படுத்தப்படும்.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளில் ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும் பிரிதொரு வார்டிற்கு இளநீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
இத்தேர்தலில், முதல் கட்ட வாக்குப்பதிவில் 31, 698 வாக்குச்சாவடிகளிலும், 2-ம் கட்ட வாக்குப்பதிவில் 32,092 வாக்குச்சாவடிகளிலும், மொத்தம் 63,790 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள அடிப்படை விவரங்களை கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தேசிய தகவலியல் மையத்துடன் இணைந்து ஆன்லைன் முறையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரித்துள்ளது.