தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் October 11, 2019
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

October 11, 2019

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை காலம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. டெல்லி வரை தென்மேற்கு பருவமழை விலகிவிட்ட நிலையில் இன்னும் 10 நாட்களில் ஆந்திரா வரை விலகிவிடும் என்றும், வருகிற 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியதாவது:-
தெலுங்கானா மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு இடையே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக உள் மற்றும் தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களிலும், நீலகிரி, கோவை, சேலம், கிருஷ்ணகிரி உள்பட வடமேற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், 'சின்னக்கலாறு 7 செ.மீ., பாப்பிரெட்டிபட்டி, நாமக்கலில் தலா 4 செ.மீ., திருச்சுழி, திருவாடனை, மேட்டுப்பாளையம், நடுவட்டத்தில் தலா 3 செ.மீ., சூலூர், தாளவாடி, வால்பாறை, பென்னாகரம், தாம்பரத்தில் தலா 2 செ.மீ.' உள்பட பல இடங்களில் மழை பெய்தது.